தேனி வனத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்துகொண்ட குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் சந்தித்து வரும் கடுமையான சிக்கல்கள் மற்றும் வனத்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மஞ்சனூத்து செக்போஸ்டில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்லும்போது ஆதார் கார்டு காட்ட வேண்டும் என கடும் கெடுபிடிகள் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை மொத்தமாக கொண்டு செல்வதற்குகூட வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசுரடி கிராமத்தில் மின் வசதி இன்றி மக்கள் இருளில் வாழ்ந்து வருவதாகவும் சோலார் அனுமதிகூட மறுக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கூட்டத்தின் போது, வண்டையூர் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை வீடியோ கால் மூலம் மிரட்டி இடிக்கச் செய்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக இடிக்கப்பட்ட வீட்டின் அருகில் சேலையைத் திரைச்சிலையாகக் கட்டி பாத்ரூமாகப் பயன்படுத்தி வந்த பிரசவத்திற்காக வந்த பெண்ணை வனத்துறை அதிகாரி ஒருவர் பாத்ரூம் கட்ட அனுமதி இல்லை நீ குளிப்பதை போட்டோ எடுத்து ரேஞ்சருக்கு அனுப்புவேன் எனக்கூறி போட்டோ எடுக்க முயன்றதாகவும் அதைக் தட்டிக் கேட்ட தாயை மிரட்டியதாகவும் விவசாயிகள் தரப்பில் கண்ணீருடன் ஆவேகமாகப் பேசப்பட்டது.

பெண்களின் தனியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், விவசாயிகளின் மாடுகள் காணாமல் போனது மற்றும் இதுதொடர்பாக விவசாயிகள் முறையிட்டபோது வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கூட்டத்தில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
விவசாயிகள் முன்வைத்த புகார்களை அதிகாரிகள் தரப்பில் லேசாக மறுக்கவே அது கூட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்படும் என்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.