கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், மாணவர்களுக்கு 5 லட்சத்து 32 ஆயிரம் சைக்கிள்கள் வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். டெண்டரில் பங்கேற்கத் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஐந்து முதல் ஆறு நிறுவனங்கள் பங்கேற்றதாகவும் கூறினார். டெண்டர் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, குறைந்த விலையைக் குறிப்பிடும் நிறுவனத்துக்கே ஒப்பந்தம் வழங்கப்படும் என்றார்.

கடந்த முறையைவிடக் குறைந்த விலையில் சைக்கிள்களைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்படும் என்றார். முதலமைச்சரின் விருப்பப்படி, மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும், கடந்த முறையைவிட உறுதியான, தரமான சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சைக்கிள் டெண்டர் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கோவை மாநகராட்சி சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மக்களின் அனுமதியின்றிச் சாலைகளில் குழி தோண்டக் கூடாது எனக் கூறிய அவர், மருதமலை சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
