• Fri. Nov 6th, 2026

தேனியில் கோர விபத்து – அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!

ByAjmalkhan saleemraja

Nov 6, 2026

தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ரயில்வே கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வளைவில் திரும்பும்போது திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அருகில் சென்ற காரின் பக்கவாட்டில் மோதிய பேருந்து, தொடர்ந்து எதிரே வந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த மாசாணமுத்து என்பவர் மீது அரசு பேருந்து மோதியதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி நகர காவல்துறையினர், பேருந்தின் அடியில் சிக்கியிருந்த மாசாணமுத்துவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக தேனி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியதாக அரசு பேருந்து ஓட்டுநர் ரங்கமோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.