• Wed. Nov 4th, 2026

சாலையில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து..,

ByKalamegam Viswanathan

Nov 4, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் இருந்து புதுப்பட்டி வழியாக காடுபட்டி செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுவதாகவும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மன்னாடி மங்கலத்தில் இருந்து செங்கல் ஏற்றி சென்ற லாரி குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்த நிலையில் லாரியின் சக்கரம் பள்ளத்தில் இறங்கி லாரி ஒரு பக்கமாக கவிழ்ந்து நின்றது.

இந்த நிலையில் ஓட்டுனரின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் லாரியில் செங்கல் அதிகமாக இருந்ததால் பள்ளத்தில் இறங்கிய லாரி ஒரு பக்கமாக சாயத் தொடங்கியதாக கூறப்படுகிறது இதனால் பாரத்தை குறைத்து லாரியை மீட்கும் முயற்சியில் அந்த பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்டவுடன் டிரைவரை பத்திரமாக கீழே இறக்கி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றனர் தொடர்ச்சியாக விபத்து ஏற்படும் இந்த பகுதியில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.