• Sat. Oct 31st, 2026

அறிவுரைகளைச் செயலாக்கிய சோழன் சாதனையாளர்! 2,000 நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஐயப்பன் மணி..,

Byமுகமதி

Oct 31, 2026

சென்னையைச் சேர்ந்த மூத்த கராத்தே பயிற்றுநர் ஐயப்பன் மணி, நாளொன்றுக்கு 8 கிலோமீட்டர் வீதம் இடைவிடாமல் தொடர்ந்து 2,000 நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இவரது சாதனைக்கான பாராட்டு நிகழ்வு 2026 அக்டோபர் 29 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

ஐயப்பன் மணி கடந்த 30 ஆண்டுகளாக மாணவர்களுக்குக் கராத்தே மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற கராத்தே பயிற்றுநரான இவர், சென்னையில் ‘பார்ன் டு ஃபைட் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்’ (Born to Fight School of Martial Arts) என்ற பயிற்சி நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

மாணவர்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வலியுறுத்தி வருகிறார்.

வெறும் அறிவுரைகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், தானே முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில், பசிக்கும்போது உணவருந்துதல், இரவு 9 மணிக்குள் உறங்குதல், அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம் எடுத்துரைக்க அவர் விரும்பினார். இதனைச் செயல்படுத்தும் நோக்கில், தனது அன்றாட நடைப்பயிற்சியை உலக சாதனை முயற்சியாக மாற்றத் திட்டமிட்டார்.

இதற்காகச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அதன் வழிகாட்டுதலின்படி 2021 மே 3ஆம் தேதி தனது முயற்சியைத் தொடங்கினார். நாள்தோறும் மேற்கொண்ட நடைப்பயிற்சியின் விவரங்களை Google Maps மற்றும் Pacer Pedometer & Step Tracker செயலி மூலம் பதிவு செய்து, அவற்றைச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிர்வாகிகளுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தார்.

எங்கே சென்றாலும் இந்த வழக்கத்தை அவர் தொடர்ந்தார். மழை நாட்களிலும், வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்ற போதும் நடந்தார்.

இவ்வாறு விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், 2026 அக்டோபர் 24ஆம் தேதியுடன் 2,000 நாட்கள் என்ற இலக்கை எட்டினார். இதன் மூலம் நாளொன்றுக்கு 8 கிலோமீட்டர் வீதம் 2,000 நாட்களில் 16,000 கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொண்ட சாதனையை நிகழ்த்தினார்.

இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையிலும், நடைப்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புதுக்கோட்டையில் இயங்கி வரும் சாணக்கியன் அகாடமி தன்னார்வத்துடன் முன்வந்து பாராட்டு நடைப்பயண நிகழ்வை ஏற்பாடு செய்தது.

காலை 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து தோட்டங்கள் பட்டது.‌ 8 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடைப்பயணத்தில், பல்வேறு வயதுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஐயப்பன் மணியுடன் இணைந்து பங்கேற்றனர். நகரின் முக்கியச் சாலைகள் வழியாக நடைபெற்ற இந்த நடைப்பயணம், காலை 8.30 மணியளவில் சாணக்கியன் அகாடமியின் பயிற்சி மையத்தில் நிறைவடைந்தது.

நிகழ்வின் நிறைவில், 2,000 நாட்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு சாதனை படைத்த ஐயப்பன் மணியைப் பாராட்டி, சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சார்பில் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் சாதனைப் பதிவு கோப்பு ஆகியவை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை நகர் காவல் துணைத் கண்காணிப்பாளர் பிருந்தா‌ IPS முன்னிலை வகித்தார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிலவன், பொதுச் செயலாளர் ஆதிரை, மண்டலத் தலைவர் செல்வராஜ் மற்றும் சாணக்கியன் அகாடமியின் நிறுவனர் வெங்கடேசன், செயலாளர் ராஐ ராஜேஸ்வரி, தொழில்நுட்ப இயக்குனர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் இணைந்து அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஐயப்பன் மணி, “உலகம் இன்று அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்ட ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். அதேபோல், நற்செயல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து செய்து வந்தால், நாம் நினைக்கும் இலக்கை நிச்சயமாக அடைய முடியும்” என்றார்.

தனது சாதனையின் மூலம் நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்துள்ள ஐயப்பன் மணியின் முயற்சி, இளைய தலைமுறையினருக்கும் உடல்நலத்தில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.