மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து உள்ள முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக சென்னை கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய முக்கியமான இணைப்பு ரயில் நிலையமாக உள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு முடிவடைந்த திட்ட பணிகள் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நடைமேடையில் உள்ள ரயில் நிலைய மேற்கூரை ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழக்கூடிய நிலையில் உள்ளதாக ரயில்வே பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மழை காலங்களில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு ரயில்வே மேற்கூரை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. நேற்று மாலை 6 மணி அளவில் சோழவந்தான் பகுதியில் சூரை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. அப்போது சேதமடைந்திருந்த ரயில் நிலைய மேற்கூரை பெயர்ந்து விழக்கூடிய அளவில் பலத்த சத்தத்தை எழுப்பி கொண்டு காணப்பட்டது.

மழை பெய்த நேரத்தில் பிளாட்பாரத்தில் ரயில் நிற்கும் சமயத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும் மற்றும் ரயில் நிலைய விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் ரயில்வே பிளாட்பாரத்தில் மழைக்காக ஒதுங்கி இருந்த நேரத்தில் சேதமடைந்த ரயில் நிலைய மேற்கூரை ஆபத்தான சத்தத்தை எழுப்பி கொண்டே இருந்தது.
இதனால் பிளாட்பாரத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பயணிகள் அச்சத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமிரீத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஒரு சில பணிகள் திட்டமிடாத நிலையில் அரைகுறையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சோழவந்தான் ரயில் நிலைய மேற்கூரையில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



