சென்னையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான “தேசிய விடுதிகள் நலச்சங்க கூட்டமைப்பு” உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

காலை 10.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளின் முடிவில், கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி, ராமாபுரத்தைச் சேர்ந்த திரு ஏ. செந்தில்குமரன் தலைவராகவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் தமிழ்மணி செயலாளராகவும், பெருங்களத்தூரைச் சேர்ந்த திரு பா. மகேந்திர பூபதி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், திருமதி எம். இலக்கியா மற்றும் திருமதி சித்ரா ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திருமதி அனுசுயா பிரகாஷ் மற்றும் ஓசூரைச் சேர்ந்த திருமதி பூபதி இணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், Women’s Development State Coordinator என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டு, பெருங்களத்தூரைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரி கருணாகரன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

மேலும், திரு எம். நாகேஸ்வரராவ் ஒருங்கிணைப்பாளராகவும், திரு தியாகசுந்தர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும், சங்கத்தின் சட்டத் திட்டங்கள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஒருமித்த கருத்துடன் தீர்மானங்களை நிறைவேற்றினர். தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள விடுதிகள் நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்படுவதோடு, சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைத்து சங்கங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தங்களது ஒத்துழைப்பை உறுதி செய்தன.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கூட்டமைப்பை உருவாக்க tireless-ஆக உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
உணவு இடைவேளையுடன் நடைபெற்ற இந்த கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற நோக்கத்துடன் தேசிய விடுதிகள் நலச்சங்க கூட்டமைப்பு தனது அடுத்தகட்ட பணிகளை முன்னெடுக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.




