தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் சென்னையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட நாளில் உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் உணவு விநியோகம் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே திட்டம் தொடங்கப்பட்டதாகவும், பெரும்பாலான பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு விநியோக ஒப்பந்தம் தொடர்பாகவும், புகார் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகவல்களின்படி, ‘வையராஜா’ கேட்டரிங் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் இருப்பதாக ‘கரிஷ்மா கேட்டரிங் கார்பரேஷன்’ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் அரசியல் பரிந்துரை இருந்ததாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் முழுமையான சட்டநிலை மற்றும் இறுதி தீர்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்ய முடியும். தற்போது இது குற்றச்சாட்டு வழக்கு விசாரணை நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்த பிரச்னை காரணமாகவே உசிலம்பட்டி தொகுதியில் காலை உணவு விநியோகம் தாமதமாகி இருப்பதாகவும், ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படாததால் பள்ளிகளுக்கு உணவு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர் பிரச்சனை காரணமாக சில பள்ளிகளுக்கு மட்டும் காலை உணவு வழங்காமல் இருந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனையை சரி செய்ய மதுரை நகர் பகுதியில் இருந்து உணவு கொண்டு சென்று பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் உசிலம்பட்டி தொகுதியில் குவாரிகள் தொடர்பான விவகாரங்கள், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறைக்கு வரும் நிலப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம் தலையிடுவதாகவும் சிலர் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் முதலமைச்சர் தொடங்கி வைத்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளுக்கும் காலை உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்ற விவகாரம், உணவு விநியோக ஏற்பாடுகள் மற்றும் பள்ளி வாரியான செயல்பாட்டு நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையான தகவலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் காலை உணவுடன் தொடர்புடைய திட்டம் என்பதால், நிர்வாகத் தாமதம் ஏற்படாமல் விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் இது குறித்து முக்கியமாக தெரிவிக்க வேண்டும் என்னவென்றால் உசிலம்பட்டி தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளருக்கு இந்த காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுக் கூறிய ஒப்பந்தம் வழங்கப்பட்டு தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது அக்கட்சியில் இருக்கும் ஊழலை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது என்று கூறலாம்.




