மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி நிகழ்ச்சிகளும், இரவு சக்தி கிரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை கிடா வெட்டு நிகழ்ச்சியும், இரவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வமாகசெல்லும் நிகழ்வும் இடம்பெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாம் நாள் நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஆடல் பாடலுடன் கும்மி பாட்டு பாடி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாகப் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்துடன் வைகை ஆற்றிற்கு சென்றனர்.
இந்த ஊர்வலத்தின் போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேத்தாளி வேஷம் போட்டும், மஞ்சள் நீர் ஆடியும் மற்றும் வண்ண பொடிகளை தூவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாகக் கொண்டாடி சென்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வறட்சியின் காரணமாக, வைகை ஆற்றுப் பகுதி தண்ணீரின்றி பாலைவனம் போல காட்சி அளித்த நிலையில். இதன் காரணமாக வழக்கம்போல ஆற்றில் முளைப்பாரியைக் கரைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் வகையில், லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வைகை ஆற்று படுகையில் சிறிய குழிகளை வெட்டி, அதில் தண்ணீர் நிரப்பி பெண்கள் முளைப்பாரிகளை கரைக்க கிராம கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேலக்கால் கிராம கமிட்டியினரும், முதன்மைக்காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
தூய்மை பணிகளை மேலக்கால் ஊராட்சி நிர்வாகமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காடுபட்டி காவல் துறையும் செய்திருந்தனர்.




