கோவை, துடியலூர் அருகே இயங்கி வரும் புகழ்பெற்ற வேலம்மாள் பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை, துடியலூர் அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12-ஆம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பள்ளியின் ஒரு பகுதியில் பயன்படுத்தப்படாத பழைய மர நாற்காலிகள், மேஜைகள் மற்றும் மரச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து திடீரென அடர்ந்த புகையுடன் தீ பற்றி எரியத் தொடங்கியது.

பள்ளியில் இருந்து புகை மற்றும் தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் துடியலூர் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீ மற்ற வகுப்பறைகளுக்கும் பள்ளி வளாகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும், அந்த அறையில் இருந்த பழைய நாற்காலிகள் மற்றும் மேஜைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் வகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





