• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

4 தலைமுறைகளைக் கண்ட 101 வயது தாத்தாவின் சென்சுரி பிறந்தநாள்…

BySeenu

Sep 28, 2026

கோவை மாவட்டம் காரமடை அருகே 4 தலைமுறைகளைக் கண்ட 101 வயதான விவசாயி அய்யாசாமி தாத்தாவின் பிறந்தநாளை, அவரது மகன்கள், மகள்கள், பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் இணைந்து கேக் வெட்டிக் கோலாகலமாகக் கொண்டாடிய நெகிழ்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காரமடையை அடுத்து உள்ள காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (101). இவரது மனைவி மசாத்தாள் (85) சில ஆண்டுகளுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். தனது 100 வயதைக் கடந்த நிலையிலும், அய்யாசாமி தாத்தா இன்றும் தனக்குச் சொந்தமான நிலத்தில் சுறுசுறுப்பாக விவசாயம் செய்து வருகிறார். இத் தம்பதியருக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி 11 பேரன்கள், 2 பேத்திகள் உள்ளனர். மேலும், அய்யாசாமிக்கு 4 கொள்ளுப் பேரன்களும், 5 கொள்ளுப் பேத்திகளும் என மொத்தம் 4 தலைமுறைகளை இவர் கண்டு பூரித்துப் போய் உள்ளார்.

100 வயதைக் கடந்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அய்யாசாமி தாத்தாவிற்குப் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடக் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, வெவ்வேறு ஊர்களில் வசித்து வரும் அய்யாசாமியின் உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் என ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் நேற்று அவரது தோட்டத்தில் ஒன்றுகூடினர்.

​101-வது வயதில் அடி எடுத்து வைக்கும் தாத்தாவை நடுவே அமரவைத்து, பிரம்மாண்ட கேக் வெட்டி தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் அய்யாசாமி தாத்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்தச் சிறப்பான கொண்டாட்டம் குறித்து அவரது பேரன்கள் பேசுகையில், “நாங்கள் அனைவரும் வேலை மற்றும் வாழ்வாதாரம் காரணமாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தாலும், பண்டிகை நாட்களில் ஒன்றாகச் சேருவோம். ஆனால், 100 வயதைக் கடந்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கும் எங்களது வழிகாட்டியான தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். தாத்தாவிடம் ஆசி பெற்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது” என உணர்ச்சிவசப்பட்டுக் கூறினர்.

​நான்கு தலைமுறை உறவுகளுடன் 101 வயது தாத்தா கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் தற்பொழுது காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைரலாகி வருகிறது.