• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சென்னை மெட்ரோ ரயிலில் சர்ச்சைக்குரிய விளம்பரம் அகற்றம்..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2026

சென்னை மெட்ரோ ரயில்களில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் தொடர்பாக நான் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு கடந்த 05.09.2026 அன்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன்.

இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி, இ.ஆ.ப., 10.09.2026 அன்று அளித்துள்ள பதிலில், சம்பந்தப்பட்ட விளம்பரத்தின் உள்ளடக்கம் வேறுபட்ட பொருளை ஏற்படுத்தியதாகவும், அது பொருத்தமற்றதாக இருந்ததைத் தொடர்ந்து 05.09.2026 அன்றே விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விளம்பரத்தை வெளியிட்ட திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் (THECOS) நிறுவனத்திடம் இவ்விவகாரம் தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் கேட்டதுடன், சம்பந்தப்பட்ட விளம்பர முகமையின் நடவடிக்கையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், விளம்பரத்தின் நோக்கம் பொதுமக்களிடம் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதாக இருந்ததாகவும், ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் வேறுபட்ட பொருளை ஏற்படுத்தியதால் அது பொருத்தமற்றதாக இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதுடன், ஏற்பட்ட மனவருத்தத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பொதுவெளிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் சமூக மதிப்புகள், தனிமனித கண்ணியம் மற்றும் உள்ளடக்க உணர்வுகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் பொறுப்புடன் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

பெண்களின் கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பான எந்தவொரு வெளிப்பாடும் பொதுவெளியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சென்னை மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து அமைப்புகளில் இடம்பெறும் விளம்பரங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

எனது கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்து, விளம்பரத்தை அகற்றியதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேவேளையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் இடம்பெறாத வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது விளம்பரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.