பரவை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் குப்பைகள் தேங்கி சுகாதாரத் கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் மூதாட்டிகள் உட்பட எந்தவொரு பணியாளருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். பிற பேரூராட்சிகளில் மாதம் ₹21,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில், இங்கு தங்களுக்கு வெறும் ₹12,000 மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வார விடுமுறை மற்றும் தீபாவளி போனஸ் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதால், பணிகளைப் புறக்கணித்து முழு அளவிலான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசுகையில், “நாங்கள் அனைவரும் விஜய் சாருக்குத் தான் விசில் சின்னத்தில் வாக்களித்தோம்; எங்களின் ஏழ்மை நிலையைக் கண்டு விஜய் சார் தான் எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு முடிந்த நிலையில், பரவை பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணிகளை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர். இதனால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

தற்போது பெய்து வரும் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாகக் குப்பைகள் அழுகி, கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லக் கூட முடியாத அளவிற்குச் சூழல் மோசமடைந்துள்ளது. ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்ப்பதால், காய்ச்சல் உள்ளிட்ட கொடிய நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பரவை பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால், பேரூராட்சி அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதன் காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்களின் முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது.

சுகாதாரச் சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது
மாதம் 3000 சம்பளத்திலிருந்து தற்போது வரை பணியில் இருக்கும் மூதாட்டி 25 வருடங்களாக வேலை பார்க்கும் தனக்கு இதுவரை வார விடுமுறையோ, சம்பள உயர்வோ, பணி பாதுகாப்போ வழங்கப்படவில்லை என வேதனையுடன் கூறியது அருகில் இருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது.
