சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுதியை பூட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர், தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தை கடந்த பிப்ரவரி மாதம் வாடகைக்கு எடுத்து பெண்கள் விடுதி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் வழக்கறிஞர்கள் பாஸ்கர் மற்றும் கீதா பாஸ்கர் தம்பதியினருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விடுதியை தாங்களே நடத்த விரும்பிய கட்டிட உரிமையாளர்கள், வாடகை ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே கட்டிடத்தை காலி செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கிருஷ்ணவேணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விடுதியின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதியை துண்டித்ததோடு, அங்கு தங்கி இருந்த மாணவிகளை மிரட்டி வெளியேற்றிய பின்னர் விடுதிக்கு பூட்டு போட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடந்த மாதம் 28-ஆம் தேதி தாம்பரம் உதவி காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் ஒரு வாரமாகியும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சி.எஸ்.ஆர் கூட பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சூழலில், கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்கள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் போலீசாரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணவேணி, விடுதிக்குள் உள்ள தனது பொருட்களை மீட்டுத் தரவில்லை என்றும், முன்பணத்தையும் திருப்பி வழங்காமல் மிரட்டி வருவதாகவும் கண்ணீருடன் வேதனை தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.








