மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டி மற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் காலத்தின் போது தவெக அரசு அளித்த வாக்குறுதியின்படி, தங்களின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் சத்திரவெள்ளாளபட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வித்தியாசமான முறையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் தற்போதைய மௌனத்தையும், தங்களது வாழ்வாதார சிக்கல்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பதைக் குறிக்கும் வகையிலும் கண்களில் கருப்புக் துணி கட்டிக்கொண்டனர்.
வறட்சி மற்றும் பொருளாதாரச் சுமையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மண்ணோடு மண்ணாகி வருவதை உணர்த்தும் விதமாக கைகளில் மண்சட்டிகளை ஏந்தி நின்றனர்.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியின்படி விவசாயிகளின் வங்கிக் கடன்களை நிபந்தனையின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்
என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் பாதுகாக்க முதலமைச்சர் முன்வர வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




