மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை – மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம்!
மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை என மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 15.08.2026 அன்று இயற்கை எய்திய இரா. மணியம்மை அவர்களின் உடல், மருத்துவக் கல்விக்கு உதவும் வகையில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அவரது கணவர் பழனிவேலு தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
உடல்தானம் செய்வதற்கான விருப்பமனு பெறப்படும் போதே, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதனை படித்துப் பார்த்து சம்மதம் தெரிவித்த பின்னரே விண்ணப்பம் பெறப்படுகிறது. அதன்படி, இறந்தவரின் குடும்ப வழக்கப்படி மேற்கொள்ள வேண்டிய அனைத்து சடங்குகளையும் முடித்த பின்னர், குடும்பத்தினரே உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வந்து ஒப்படைப்பதே இதுவரை பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.
விடுமுறை நாட்களில் உடல்தானம் செய்யப்படும் நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் உடல் பெறப்பட்டு, மருத்துவமனை பிணவறையில் உள்ள பிரத்யேக குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் உடற்கூறியல் துறை நிபுணர்கள் மூலம் உடல் பதப்படுத்தப்பட்டு, உரிய நேரத்தில் மருத்துவக் கல்விக்காக பயன்படுத்தப்படும். மணியம்மை அவர்களின் உடல்தானத்திலும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனிவேலு குறிப்பிட்டதற்கு மாறாக, மருத்துவக் கல்லூரியின் மூத்த பெண் மருத்துவர் நேரில் இருந்து அனைத்து நடைமுறைகளையும் கவனித்து, உடலைப் பெற்று குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 17.08.2026 அன்று காலை நிபுணர்கள் மூலம் உடல் ஆய்வு செய்யப்பட்டு, கல்லூரி துணை முதல்வர், உடற்கூறியல் துறைத் தலைவர் உள்ளிட்ட மருத்துவர்கள் முன்னிலையில் உரிய மரியாதையுடன் உடல் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்போது பழனிவேலுவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன், நன்றி தெரிவித்து பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டதாகவும், இவை அனைத்தும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முழு சம்மதத்துடனேயே நடைபெற்றதாகவும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த நேரத்தில் குடும்பத்தினர் யாரும் எந்தவித குறைபாட்டையும் தெரிவிக்கவில்லை. அப்போதே குறைபாடு குறித்து தெரிவித்திருந்தால், உரிய விளக்கம் அளித்திருப்பதுடன், குடும்பத்தினர் விரும்பிய வகையில் தேவையான ஏற்பாடுகளையும் செய்திருப்போம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், உடல்தானம் செய்த மணியம்மையின் மருமகள் மதுரை மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்துவர் என்றும், உடல்தான நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்த அவர் எந்தவித குறைபாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. மாறாக, உடலை அலைக்கழிக்காமல் பெற்று குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைத்ததற்காக மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்தானம் செய்தவரின் குடும்பத்தினரின் இந்த புனிதமான செயலை கல்லூரியின் அனைத்து மருத்துவர்களும் பாராட்டி பதிவிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற புனிதமான உடல்தான நிகழ்வில் பழனிவேலு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு மட்டுமே அரசு மரியாதை வழங்குவதற்கான அரசாணை உள்ள நிலையில், இறந்தவரின் உடலை மருத்துவக் கல்விக்காக தானமாக வழங்கும் குடும்பத்தினருக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதே நடைமுறை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை பிணவறையில் மட்டுமே குளிரூட்டப்பட்ட பெட்டி இருப்பதால், உடல்களை அங்கு பாதுகாப்பாக வைப்பதே நடைமுறையாக இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடைமுறையால் உடல்தானம் வழங்கும் குடும்பத்தினர் சங்கடமாக உணரக்கூடும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனிவரும் காலங்களில் உடற்கூறியல் துறையிலேயே குளிரூட்டப்பட்ட பெட்டி அமைக்க நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.

எதிர்கால மருத்துவர்களை உருவாக்குவதில் உடல்தானம் செய்யும் குடும்பங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதனை உணர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே உடல்தானம் பெறுவதில் மதுரை மருத்துவக் கல்லூரி தமிழகத்திலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




