மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்குட்பட்ட சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது வடகரை கண்மாய், இப்பகுதியைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கியமான பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இங்கு வறட்சி காலங்களில் கண்மாயின் மேற்பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, பாகற்காய் மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பைச் சில சமூக விரோதிகள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயத்திற்கு என்று அனுமதி பெற்றுவிட்டு, கண்மாயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் மண் அள்ளப்படுகிறது.

விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டிய மண்ணைத் தனிநபர்களின் கட்டடப் பணிகளுக்காகவும், வீடுகள் கட்டுவதற்காகவும் கூடுதல் விலைக்கு வெளி நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் கட்சி ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த முறைகேட்டால், உண்மையான விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மண் மறுக்கப்பட்டு, பணம் படைத்தவர்களுக்குச் சாதகமாக மாற்றப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திலோ அல்லது நேரடி மனுவாகவோ இதுகுறித்து முறையான புகார் அளிக்க வேண்டும்.
வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கண்மாயில் நடக்கும் சட்டவிரோத மண் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்
விதிமீறிச் செயல்படும் வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நீர்நிலைகளின் இயற்கை அமைப்பைக் காக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது




