முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்திருக்கிறது. தற்போது முதல்வர் அலுவலகத்திலே அதிகார மோதல் அரங்கேறி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

முதல்வருக்கு நெருக்கமான உள் வட்டாரத்தில் யாருக்கு செல்வாக்கு, யாருக்கு கூடுதல் செல்வாக்கு என்பதில் போட்டா போட்டி நடந்து வருவதாகவும், குறிப்பாக அரசு ரீதியான முடிவுகளில் முதல்வரின் நட்பு வட்டாரத்தினை விட அரசின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர் கூறுவதுதான் முதல்வர் விஜய்யிடம் எடுபடுகிறது என்றும் அதுதான் தற்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர்களுக்குள்ளே கடும் விவாதம் நடைபெற்று வருவதாக செய்தி வெளிவருகிறது.
முதல்வரின் உள் வட்டாரத்தில் இருப்பவர்களான ஜான் ஆரோக்கியசாமி விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி , கலை இவர்களுக்குள்ளும் நடக்கும் பலப்பரீட்சை எப்போது வேண்டுமானாலும் அம்பலத்துக்கு வரலாம் என செய்திகள் வருகிறது.
முதல்வர் விஜய் அதிகார மைய குழப்பத்தால் தற்போது தவெக அரசு நிர்வாகம் தடுமாறுவதும், தடமாறுவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு கவலை ஏற்படுத்தி வருகிறது.
ஏனென்றால் தேர்தலின் போது வாக்குறுதிகளை வாரி இறைப்பதும், ஆட்சிக்கு வந்த பின் நிதிநிலை சரியில்லை என்பதும், தமிழக மக்கள் பார்த்து பழகிய புளித்துப் போன அரசியல் தான் இதில் புதிய மாற்றம் ஒன்றும் உருவாகவில்லை.
விஜய்முதல்வராக பொறுப்பேற்கிற முன்பு சாத்தியம் இல்லாத திட்டங்களை உங்க பிள்ளை விஜய் எப்போதும் அறிவிக்க மாட்டான். அதேபோல அறிவித்த திட்டங்களை
தகுதி உள்ளவர்கள் என்றும் நிபந்தனைகள் என்றும் உங்களுக்குள் பிரித்துப் பார்க்க மாட்டான். என்று வீர வசனமாக முழக்கமிட்டார் .அந்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பித்தான் அப்பாவி மக்கள் அனுபவம் இல்லாத விஜய்யை முதல்வர் அரியணையில் அமர்த்தினார்கள்.

முதல்வராக பொறுப்பேற்கிற போது ஒரே பவர் சென்டர் தான் என்றும் அவர் உறுதி அளித்தார். அதிலும் இப்போது கோட்டை விட்டிருக்கிறார். இப்போது பவர் சென்டர்கள் பல பக்கத்திலும் உருவாகி இருப்பதை தவெக அரசின் தடுமாற்றத்திலிருந்து நாம் உணர முடிகிறது.
வெளிப்படைத்தன்மை என்று சொன்னால் இப்போது அதுவும் கேள்விக்குறியாகி இருக்கிறது. முதல்வர் அறை மாற்றத்திலேயே அந்த வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதும், அதில் சர்ச்சையாகி இருப்பதும் முதல்வர் வேண்டுமானால் அதை பதில் சொல்லாமல் கடந்து போகலாம். ஆனால் மக்களுக்கு அதிலே மிகுந்த கவலை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வர் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொன்னால் தமிழ்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்குமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.
முதல்வர் அறிவித்த திட்டங்களான 200 யூனிட் மின்சாரம் இன்றைக்கு எப்படி அது மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது? பயிர் கடன் தள்ளுபடி தேர்தலுக்கு முன்பு அவர் சொன்னது என்ன? தேர்தலுக்கு பின்பு அவர் நடத்திக் காட்டியது என்ன? சொன்னது ஒன்று, செய்தது ஒன்று என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதேபோல 6 சிலிண்டர் சொன்னதை இப்போது 3 சிலிண்டராக அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண அறிவிப்பும் இன்றைக்கு சர்ச்சை எழுந்திருக்கிறது. இதில் மகளிர் பெரிதும் எதிர்பார்த்த 2500 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது எப்போது என்று மக்கள் கேள்வியோடு காத்திருக்கிறார்கள்.

முதல்வர் விஜய் அவர்களே, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு அன்னை தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான் எப்படி நிறைவேற்றிக் காட்டினார்கள், அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற்றார்கள் என்பதை முதல்வர் விஜய் பாடம் படித்துக் கொண்டால் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
20 கிலோ விலையில்லாத அரிசி, மடிக்கணினி தாலிக்கு தங்கம், ஆலயங்கள் அன்னதானம், விலையில்லா மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி ,கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இப்படி அம்மா சொன்னால் அன்னை தமிழக மக்கள் நம்புவார்கள், நம்பினார்கள், நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே எந்த நிலையிலும் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக்கூடாது. அதுதான் ஒரு ஆளுமையினுடைய முதல் அடையாளமாக இருக்கிறது.
11 வகை மதுபானங்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும். செயற்கை கலக்கப்படுவதால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை என்றெல்லாம் உணவுஆணயத்தின் அறிவிப்பு கொடுத்து 15 மணி நேரத்திலே அந்த 11வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடையில்லை என்று உத்தரவு வாபஸ் வாங்கப்படுகிறது என்றால் எப்படி மன உறுதியோடு அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு அடையாளப்படுத்துகிறார் என்று புரியவில்லை.
பயிர் கடன் தேர்தலுக்கு முன்பாக சொன்ன வாக்குறுதிகளில் ஐந்து ஏக்கருக்கு கீழே முழு தள்ளுபடி, ஐந்து ஏக்கருக்கு மேலே 50% தள்ளுபடி, என்று சொன்னார்கள் . ஆனால் 50000 கடன் வாங்கி இருந்தால் தள்ளுபடி. அதற்குப் பிறகு போராட்டம் எடுத்ததற்கு பிறகு 75000, அதற்குப் பிறகு ஒரு லட்சம் என்று ஏன் மூன்று முறை தன்னுடைய நிலைப்பாட்டை முதல்வர் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்? அதுதான் தவெக அரசின் தடுமாற்றம்.இந்த பவர் சென்டர்களால் தடுமாறுகிறதா? தவெக அரசு தடம் மாறுகிறதா? தவெக அரசு எங்கே செல்கிறது?

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள், ஆகாசத்திற்கு சென்று வைகுண்டத்தை பார்க்க காட்டப் போகிறோம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் இன்றைக்கு இந்தியா வெற்றிக் கழகம் என்று பெயர் மாற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை அந்த நிலையிலே தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஐயோ, பரிதாபம்! இந்த நிலையிலே தான் தமிழக மக்கள் உள்ளனர்.
இன்றைக்கு மக்கள் 100 நாட்களிலேயே வேதனை உச்சத்திலே சென்றிருக்கிறார்கள். தெரியாமல் நடந்துவிட்டதா? புரியாமல் செய்துவிட்டோமா? இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று மக்கள் கவலையிலே இருக்கிறார்கள் என கூறினார்.




