தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
பரந்தூர் விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகள் ஒப்பதல் இல்லாமல் விளை நிலங்களை கைப்பற்றவும், ஏரிகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரிக்கவும் சட்டவிரோதமாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023யை கொண்டு வந்து விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டது.

கிராமம் கிராமமாக ஏரிகள், நீர்வழி பாதைகள் அனைத்தையும் அபகரிக்கும் நடவடிக்கையை தீவிரமாக்கியது. எனவே, ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பரந்தூர் விமான நிலையத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கைவிடப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்,
நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். சென்னைக்கு வடக்கே ஆந்திர எல்லையோரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எடுத்த முயற்சியால் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவை நோக்கிச் சென்றது.
இந்நிலையில் தற்போது சென்னைக்கு தெற்கு பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன் வருமேயானால் முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வரத் துவங்கும்.
கர்நாடக முதலமைச்சர் காவிரியில் உபரி நீர் தமிழகம் கடலில் கலக்கச் செய்வதாக கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறமானது.
தமிழக அரசு உடனடியாக காவிரியின் உபரி நீரை தடுத்து ராசிமணலில் புதிய அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். இதற்கான ஒப்புதலை திமுக அரசு 2024 இல் வழங்கி உள்ளது. கர்நாடக விவசாயிகளும் ராசிமணலில் அணைக்கட்ட ஒப்புதல் கொடுத்துள்ளனர். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்திற்கு பொருத்தமற்றது. இத்திட்டத்தை காரணம் காட்டி மேகதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ? என்று அஞ்சத் தோன்றுகிறது.
தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் பெய்கிறபோது 4 லட்சம் கன அடி வரையிலும் உபநீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும். இதே காலகட்டத்தில் தான் கோதாவரி ஆற்றிலும் உபரி நீர் கடலுக்கு செல்லும்.
எனவே, காவிரி கோதாவரி இணைத்து தமிழகத்தில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். இணைப்பதின் மூலம் பேரழிவை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.
தற்போதைய நிலையில் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் புதிய அணை கட்டுவது ஒன்றுதான் தமிழக நலனுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.




