சென்னை அடுத்த பல்லாவரத்தில் தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு “உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் 6 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

பல்லாவரத்தில் உள்ள தனியார் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் இ.சி.ஆர். சரவணன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள்பிரகாசம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டம் 6 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம் பள்ளிக்கரணை வரை சென்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.

ரத்தநாள நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஆறாத கால் புண்கள் மற்றும் கால்களில் ஏற்படும் ரத்த ஓட்டக் குறைபாடுகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது போன்ற விழிப்புணர்வு கருத்துகளை இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் கொண்டு சென்றது.
மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் பல உறுப்பு நீக்கங்களைத் தடுக்க முடியும் என்பதையும், “ஒவ்வொரு அடியும் ஒரு உறுப்பை பாதுகாக்கும்” என்ற செய்தியையும் இந்த ஓட்டம் வலியுறுத்தியது. உடல் இயக்கம், சுயசார்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சமூக இயக்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கே.எம்.எச். மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டம், ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.




