மதுரை கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட யானைமலை ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதியின் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களாக பல்வேறு கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன.

போதிய பருவமழை இல்லாதது, கடும் வெப்பம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக யா.ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட சுதந்திர நகர் 1, 2 மற்றும் 3 வது தெருக்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் போர்வெல்களில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போர்வெல்களில் தண்ணீர் வராத நிலையும், சில இடங்களில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் 400 முதல் 500 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்த நிலையில், தற்போது 700 முதல் 800 அடி ஆழம் வரை போர்வெல் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி வாழும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தெருவில் உள்ள குழாயில் அதிகாரிகள் தண்ணீர் விடப்படுகின்றனர்.
5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி வழக்கமாக சுமார் 15 நிமிடங்களில் நிரம்பிய நிலையில், தற்போது 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை மோட்டாரை இயக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் மோட்டார் இயக்கப்படுவதால் கடைக்கோடி உள்ள பகுதி மக்களுக்கு குழாய்கள் வழியாக செல்லும் தண்ணீர் சுத்தமாக கிடைப்பதில்லை. இதனால் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். தண்ணீர் வரத்தது குறைவாக வரும் காரணத்தினால் அனைவரும் மோட்டார்களை உபயோகிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியும் பொதுமக்கள் சிலர் கேட்பதில்லை. இதனால் குழாய் சண்டை நாள் தோறும் நடைபெற்ற வண்ணம் காணப்படுகின்றன.
இதனால் குடிநீரை லாரிகள் மற்றும் கேன்கள் மூலம் விலைக்கு வாங்கும் நிலை அதிகரித்துள்ளதாகவும், தண்ணீர் தொட்டி நிரம்பும் வரை வீட்டில் ஒருவர் காத்திருக்க வேண்டியிருப்பதால் வேலைக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஒத்தக்கடை பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தவெக கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் சாலை மறியலில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.





