ஒரு கொலை கூட நடக்கக் கூடாது, சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை – மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடைபெற்று வருகிறது. இதன் 9-வது நாளாக கோவையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தின் போது, அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அரிசி, சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பொது விநியோக முறையின் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான மின் இணைப்புக் கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மழைப் பற்றாக்குறை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதோடு, கோவை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கனவுத் திட்டமான பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு போதிய மக்கள் தொகை இல்லை எனக் கூறி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஒன்றிய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. பிற மாநிலங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும் ஒன்றிய அரசு உடனடியாக இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனிடையே, தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்ற அவர், இதில் புதிய ஒப்பந்தங்கள் எவை, புதுப்பிக்கப்பட்டவை எவை என்ற விவரங்களை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போதுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக உயர்த்த ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சிப்பதன் பின்னணியில், தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தைச் செல்லாதாக்கி மனுதர்ம சட்டத்தைக் கொண்டுவருவதற்கான சதி வலையுள்ளது என முத்தரசன் குற்றம் சாட்டினார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைத் தற்போது நடைமுறையில் உள்ள 543 தொகுதிகளிலேயே உடனடியாக வழங்க வேண்டும். மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் வாக்குறுதியை நம்பி அதிமுக செயல்படுவது ஏற்புடையதல்ல.
நாடாளுமன்றம் ஒரு நாள் இயங்குவதற்கு மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.9 கோடி செலவிடப்படும் சூழலில், டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் குறித்து உள் துறை அமைச்சர் பதிலளிக்காததால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கிப்போனதற்குப் பிரதமரும் உள் துறை அமைச்சருமே காரணம் என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்ததால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் அமுதன் விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
போதைப்பொருளைப் பிடிப்பதை விட, குஜராத் துறைமுகம் போன்ற அது புறப்படும் இடங்களிலேயே தடுத்து நிறுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் ஒரு கொலை கூட நடக்கக் கூடாது என்ற வகையில் சட்டம் – ஒழுங்கை அரசு பாதுகாப்பதே முதன்மையான கடமையாகும். உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் அனைத்தும் மதச்சார்பற்ற பகுதிகளாகவே இருக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிச் சென்ற மேடை கோமயம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கண்டிக்கத்தக்க பாவச் செயலாகும். கல்வி, உணவு மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் என எதிலுமே சாதி, மத பாகுபாடுகள் ஊடுருவுவதை அனுமதிக்கக் கூடாது என்றும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை அரசு உறுதியுடன் நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





