கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியச் சாலையான திருச்சி சாலையில், நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவர், ஒரு கையால் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி, மற்றொரு கையால் மடியில் வைத்து இருந்த லேப்டாப்பில் (Laptop) தீவிரமாக வேலை செய்து கொண்டே ஆபத்தான முறையில் பயணித்து உள்ளார்.

இரவு நேரத்தில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையிலும், சிறிதும் அச்சமின்றித் தனது கவனம் முழுவதையும் லேப்டாப் திரையிலேயே வைத்துக் கொண்டு அவர் பைக்கை இயக்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அவருக்குப் பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த நபர்கள், இந்த ஆபத்தான பயணத்தைச்த் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.
தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்து உள்ளனர்.

“வேலை அழுத்தம் (Work Pressure) எந்தளவுக்கு இருந்தாலும், இப்படிச் சொந்த உயிருக்கும் சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துக் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய அந்த நபரைத் தேடி அறிவுரை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




