தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ இன்று காலை உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை வரவேற்க தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திருவிழா கோலத்தில் காட்சியளித்தன.

இயக்குநர் H.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், K.V.N. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் திரண்டனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க வளாகம் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள், கட்-அவுட்கள், தாரை தப்பட்டை, பட்டாசு வெடிப்பு மற்றும் ரசிகர்களின் உற்சாக நடனங்களால் விழாக்கோலமாக மாறியது. ரசிகர்களின் கூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்நிலையில், வெற்றி திரையரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘கிருஷ் ஸ்கிரீன்’ திரையரங்கும் இன்று திறந்து வைக்கப்பட்டது. மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார் குத்துவிளக்கேற்றி புதிய திரையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் வெங்கட் ரமணன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய திரையரங்கில், முதல் வரிசையிலேயே படுத்துக்கொண்டு திரைப்படம் பார்க்கும் வகையில் 10 பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவைத் தொடர்ந்து அமைச்சர், அனிருத் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் புதிய திரையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்தனர்.
இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதிற்குட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அனைத்து திரையரங்குகளுக்கும் அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.




