• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Jul 21, 2026

தமிழக அரசே டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் கோவை மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் OLA, UBER, RAPIDO போன்ற தனியார் செயலிகளுக்கு மாற்றாக தமிழ்நாடு அரசாங்கமே ஒருங்கிணைந்து டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும், இல்லையென்றால் அது தனியா நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், டாக்ஸிகளுக்கு பொது இடங்களில் போதிய பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும் சட்டத்திற்கு புறம்பாக இயங்கக்கூடிய தனியார் கார் டாக்ஸி மற்றும் பைக் டேக்ஸிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தனியார் வாகனங்கள் வாடகைக்கு செல்லும் பொழுது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வாறு தனியார் டாக்ஸிகளில் சென்றால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தனர். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள் பைக் டாக்ஸி அனுமதிக்கப்படுமேயானால் T Broad பதிவு பலகையை அந்த வாகனங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த தமிழ் டாக்ஸி செயலியை விரைந்து கொண்டு வர வேண்டும் அதற்கு முன்பாக அனைத்து டாக்ஸி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினரை அழைத்து பேசி அந்த டாக்ஸி செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு டேரிஃப் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை என்றால் தங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுவதாகவும் தொடர்ச்சியாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.