கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.
பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் ‘கூலி’ போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.
சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே, காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.








