• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை துவங்க பயணிகள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 21, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த பேருந்து சேவைகள் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருமங்கலத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு செக்கானூரணி சோழவந்தான் வழியாக சென்று வந்த 999 என்ற மொபசல் பேருந்து கடந்த 2014 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்ட போது நிறுத்தப்பட்ட இந்த பேருந்து தற்போது வரை மீண்டும் இயக்கப்படவில்லை. குறிப்பாக மேம்பால பணிகள் ஆரம்பித்தவுடன் சோழவந்தான் ரயில்வே கேட் மூடப்பட்டது இதனால் ரயில்வே கேட் வழியாக செல்ல முடியாத நிலையில் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான் வரை மட்டுமே வந்து சென்றது தற்போது வரை இந்த நிலையே தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக திருமங்கலத்தில் இருந்து வாடிப்பட்டி செல்லக்கூடிய பொதுமக்கள் குறிப்பாக தாலுகா அலுவலகம் யூனியன் அலுவலகம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் வாடிப்பட்டி நீதிமன்றம் வாடிப்பட்டி ஜவுளி பூங்கா உள்பட பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி வந்தனர் காலை 8. 45 மணிக்கு சோழவந்தான் வரும் இந்த பேருந்து 9 மணிக்கு வாடிப்பட்டி செல்லும் வகையில் இருந்தது மேலும் இந்த பேருந்தின் காரணமாக வாடிப்பட்டியில் செவ்வாய் தோறும் நடைபெறும். ஆட்டுச் சந்தைக்கு வருபவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி வந்தனர்.

அதேபோல் மாலை நேரத்தில் வாடிபட்டியில் இருந்து அலுவலகம் முடிந்து திருமங்கலம் செக்கானூரணி உசிலம்பட்டி செல்பவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வாடிப்பட்டி திருமங்கலத்திற்கு இணைப்பு பேருந்தாக இந்த பேருந்து இருந்து வந்தது குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த பேருந்து வந்து சென்றதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை சிரமம் இன்றி செய்வதற்கு ஏதுவாக இருந்தது. தற்போது இந்த பேருந்து சேவை இல்லாததால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகையால் திருமங்கலம் முதல் வாடிப்பட்டி வரை செக்கானூரணி சோழவந்தான் வழியாக சென்ற இந்த பேருந்தை பொதுமக்கள் பயணிகள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களும் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி இந்த பேருந்தை மீண்டும் வாடிப்பட்டி வரை வந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.