• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாதுகாக்க போராட்டம் தொடரும் ..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 13, 2026

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “வி.பி.ஜி. ராம்” புதிய நடைமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் இன்று காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூபேஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ(எம்) புதுச்சேரி மாநில செயலாளர் த. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒன்றிய மோடி அரசு புதிய ‘வி.பி.ஜி. ராம்’ நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம், வேலை உறுதிச் சட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் நீக்கப்படுகின்றன.

இதுவரை 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீதத்தை மாநில அரசும் வழங்கி வந்தன. தற்போது அதை மாற்றி, 60 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி, மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதிச் சுமை உள்ள நிலையில், கூடுதல் நிதியை மாநிலங்கள் எவ்வாறு ஒதுக்க முடியும்? இது மாநில அரசுகளின் மீது தேவையற்ற நிதிச் சுமையை திணிக்கும் நடவடிக்கையாகும். மேலும், வேலைத்தளங்களில் தொழிலாளர்களின் கருவிழியை (Iris) ஸ்கேன் செய்யும் நடைமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது குற்றவாளிகளை அடையாளம் காணும் நடைமுறையைப் போன்றது. தொழிலாளர்களின் கண்ணியத்தை பாதிக்கும் இந்த கருவிழி ஸ்கேன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். தொழிலாளர்களின் கூலியை எந்தவிதக் குறைப்பும் இன்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை முழுமையாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.