• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை..,

ByPrabhu Sekar

Jul 8, 2026

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் நடத்தப்பட்டதாகவும், கேள்வித்தாளில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடப்பிரிவைத் தாண்டி பொதுவான மற்றும் தொடர்பில்லாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக ஒரே பாடத்தை கற்பித்து வரும் ஆசிரியர்கள் இதனால் கடும் மனஅழுத்தத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தேர்வுக்காக ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதன் பாதிப்பு மாணவர்களின் கல்வியில்தான் பிரதிபலிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, மாநிலங்களின் தனிப்பட்ட கல்வி முறைகளை கருத்தில் கொண்டு உரிய தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, தனிப்பாட ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கி, தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து பின்னரே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இருந்தாலும், மாணவர்களை சங்கடப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் உருவாகும் சூழலை தவிர்க்க வேண்டும் என்றும், சமூக வலைதளப் பதிவாளர்கள் மாணவர்களின் முகத்தை மறைத்து, அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு. தியாகராஜன் தெரிவித்தார்.