• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்கச் சென்றவர் மாயம்..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2026

மதுரை கருப்பாயூரணி சின்ன பாண்டிகோவில் தெருவைச் சேர்ந்தவர் மச்சப்பாண்டி (38). இவர் வண்டியூர் கண்மாயில் அடிக்கடி மீன்பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம்போல் வலையுடன் வண்டியூர் கண்மாய்க்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி சங்கம்மாள் சந்தேகமடைந்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

அவரைப் பற்றிய தகவல் கிடைக்காத நிலையில், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வண்டியூர் கண்மாயில் இறங்கி மச்சப்பாண்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கண்மாயின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டபோதும், முதல் மற்றும் இரண்டாவது நாளில் மச்சப்பாண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கண்மாய் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு திரும்பினர்.

தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்ற தேடுதல் பணியில் மச்சப்பாண்டியின் உடல் கண்மாயில் இருந்து மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மச்சப்பாண்டி நீரில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் மீன்பிடிக்கச் செல்லும் நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

கண்மாய்களில் நீரின் ஆழம், சேறு, புதைகுழிகள் மற்றும் நீரின் வேகத்தை அறியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்பிடிக்கச் செல்வதால் பலர் ஆபத்தில் சிக்குகின்றனர்.

இதனால், ஆபத்தான கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, ஆங்காங்கே “ஆபத்தான பகுதி – நீரில் இறங்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மீன்பிடிக்கச் செல்லும் நபர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், முக்கியமான கண்மாய்களில் அவசரகால மீட்பு உபகரணங்கள், பாதுகாப்பு கயிறுகள் மற்றும் உயிர்காக்கும் மிதவைகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் தொடர்பு எண்களை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.