• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 12, 2026

மதுரை மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளைக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சேகரிக்கப்பட்டு வருகிறது இந்த குப்பை கிடங்குக்கு அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதி விவசாயிகள் அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, தண்டு கீரை, முருங்கைக்கீரை கத்திரிக்காய், வெண்டைக்காய், மருதாணி போன்றவை விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளைவிக்கும் கீரைதான் மதுரை மாநகர் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக மதுரை மாநகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலம் வழியாக இந்த வெள்ளக்கலுக்கு வந்தடையும் அந்த நீரினை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய் தொற்று பரவும் என அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டும் விவசாயத்திற்கு தருவதாகவும் 400 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும், கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் அவை அருகில் உள்ள அய்யன் பாப்பாக்குடி கம்மாய் மற்றும் ஐவக வேந்தல் கண்மாயில் கலக்கிறது.

இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது என விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இது குறித்து அண்மையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை காகன் தீப் சிங் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து 15 வருடங்களாக செயல்படும் சுத்திகரிப்பு நிலையம் மாதம் 15 லட்சம் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சந்தப்பேட்டை, முத்துப்பட்டி பகுதிகளில் உள்ள கிணறுகளில் சேமிக்கப்பட்டு குழாய் வழியாக வெள்ளக்கல் வந்தடையும் இங்கு விவசாய நிலத்திற்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் குழாய் மூலம் நீர் பிரியும் இடத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை அடைத்து ஒரு பக்கமாக கழிவுநீர் கிணறுகளுக்கு திருப்புவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளக்களுக்கு வருகை தந்து பணியை தொடங்கினர். அப்போது அதனை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் கையில் கீரை கட்டுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்ததால் அந்த இடம் பரபரப்பானது, இந்த பகுதி விவசாயிகளை தொந்தரவு செய்யக்கூடாது என மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளதாகவும் விவசாயத்திற்கு கழிவு நீர் கொடுக்காவிட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை யாவது அதிகமாக கொடுங்கள் இல்லை என்றால் எங்கள் விவசாயம் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தை நம்பி உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலத்திற்கு செல்வதால் அந்த விவசாயப் பொருட்களில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் தண்ணீரை நிறுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குழாய் மூலமாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

ஆனால் அந்த தண்ணீர் பத்தாது வீணாக கண்மாயில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட வேண்டும் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.