• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வை தொடர்ந்து அதிரடி மாற்றம்..,

ByKalamegam Viswanathan

Jun 5, 2026

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஸ்க் அணிந்துகொண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாலையில் மாஸ்க் அணிந்து கொண்டு சண்முக விலாசம் வாயிலுக்கு சென்ற ரமேஷிடம், அமைச்சர் என தெரியாமல் விரைவு தரிசனம் செய்ய அர்ச்சகர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காவலாளிகள் இருவர் பணம் கேட்டு வசமாக சிக்கினர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயிலின் இணை ஆணையர் ராமு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

இடமாற்றத்தின் பின்னணி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக இருப்பது திருச்செந்துர். அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் ஒரே கோயில் திருச்செந்தூர் கோயில்தான் என்ற சிறப்பை பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

முருகன் கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு கோயில் ஊழியர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றசாட்டு தொடர்ந்து பக்தர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் ரமேஷ், கடந்த 29 ஆம் தேதி கோயிலில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சரிடமே ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியிருந்தார்
முருகனை விரைவாக தரிசனம் செய்ய பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் அர்ச்சகர் மற்றும் காவலாளி ஈடுபட்டதை கையும் களவுமாக அமைச்சர் ரமேஷ் பிடித்த நிலையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் ரமேஷ், பின்னர் பக்தர்களிடம் குறைகள் எதுவும் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக்குப்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரமேஷ், ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்ந்தார். இந்த சூழலில்தான், திருச்செந்தூர் கோயிலில் ஆணையர் மற்றும் இணை ஆணையர் என இருவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.