• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“தூய்மையான தாம்பரம் பசுமையான தாம்பரம்” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சரத்குமார்..,

ByPrabhu Sekar

May 27, 2026

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி முழுவதும் “தூய்மையான தாம்பரம் – பசுமையான தாம்பரம்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பசுமைப்பணிகளை தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுவதாக அமைச்சர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி மாநகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிகளை பசுமை மண்டலங்களாக மாற்றுதல், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ள இடங்களில் வியூ கட்டர்கள் அமைத்து சுகாதாரமான சூழலை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்த கிழக்கு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் பாதசாரிகள் சுரங்க நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் சுவர் ஓவியங்கள், மரக்கன்றுகள் மற்றும் மின்விளக்குகள் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிட்லபாக்கம் ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புற பசுமை பணிகளும் தொடங்கப்பட்டன.

தொடர்ந்து தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலை பகுதியில் 32வது வார்டில் சுமார் 8.9 ஏக்கர் பரப்பளவில் 24 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டப்பணிகளையும் அமைச்சர் சரத்குமார் ஆய்வு செய்தார்.

கால்பந்து, டென்னிஸ், நீச்சல், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி மையங்களுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட உள்ளதாகவும், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.