மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே பூக்குழி மேடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவரது மனைவி ஜெயா (37), கடந்த மே 20 ஆம் தேதி 12:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதால் தலைக்காயம் அடைந்தார்.

வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்றைய தினம் பிற்பகல் 2.25 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் (Trauma Care Centre) தலைக்காயப்பிரிவு 101 -ICU வார்டில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே 22 ஆம் தேதி காலை 08.08 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இறந்த ஜெயாவின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன் வந்ததின் அடிப்படையில், நேற்று அவரது கணவர் ஊமைத்துரையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டு. உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரலும், திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலியில் உள்ள திருநெல்வேலி கிட்னி சென்டருக்கு தலா ஒரு சிறுநீரகமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தோல், கருவிழி, எலும்பு ஆகியவை தானமாக வழங்கப்பட்டன.
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில், மூளைச் சாவடைந்த ஜெயாவின் உடல் தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட நோயாளியின் உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உடல் தானத்தால் ஆறு நபர்கள் பயனடைந்துள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்யும் பொருட்டு, அரசு இராசாசி மருத்துவமனை நிர்வாகமும், மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து, அன்னாரின் உடல், உரிய மரியாதை செய்து அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.





