விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாசனக்கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் நீரினை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, கங்கர் சேவல், கே.லட்சுமியாபுரம், கோமாளிபட்டி, எழுவன்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய் ,வெண்டை ,உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மற்றும் கொய்யா, சப்போட்டா, வாழை, உள்ளிட்ட பழக்கன்றுகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் பயன்பட்டு வருகிறது. இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் மழை நீரை தேக்கி வைக்க முடியவில்லை ஆகையால் கண்மாயை ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்தாண்டு நீர்வளத் துறை சார்பில் கணமாய் ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தப்பட்டது. கண்மாயில் வளர்ந்திருந்த கருவேல மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. கண்மாய் நீரை விவசாயத்திற்கு திறந்து விடுவதற்காக இரண்டு மதகு பழுது பார்க்கப்பட்டது.

தூர்வாரப்பட்ட வண்டல் மண் முழுமையாக அகற்றப்படாமல் கண்மாயில் மணல்மேடு போல் தேக்கி வைக்கப்பட்டது. மதகு அருகே அதிக அளவு மணல் மேடாக இருப்பதால் கண்மாய் நிரம்பும் போது விவசாயத்திற்கு மதகு பயன்படுத்தினாலும் தண்ணீரை மதகு வழியாக செல்வதை மணல்மேடு தடுத்து விட வாய்ப்புள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கன்மாயில் அதிகளவு தேங்கியுள்ள வண்டல் மண்களை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் தேக்கி வைக்கப்பட்ட மழை நீரும் மதகு வழியாக விளைநிலங்களுக்கு செல்லவும் முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.





