தமிழக வெற்றி கழகம் சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ த. சரத்குமார் இன்று சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் நேரடியாக வந்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றும், அவற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தபடி மாநிலம் முழுவதும் 717 TASMAC மதுபான கடைகள் மூடப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
அதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக மூன்று டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட உள்ளன.
இதில், சானடோரியம் ரயில் நிலையம் அருகே பெண்கள் விடுதி பகுதியில் உள்ள கடை,
– ஜிஎஸ்டி சாலையில் நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள சர்வீஸ் சாலை கடை, தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் அருகே பேருந்து நிலையம் பின்புறம் தேவாலயத்திற்கு எதிரில் உள்ள கடை ஆகியவை அடங்கும்.

இந்த கடைகள் பொதுமக்கள், பெண்கள், பயணிகள் மற்றும் வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு இடையூறாக இருந்ததால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளும் தொடரும் என எம்எல்ஏ சரத்குமார் உறுதியளித்தார்.




