மத்திய அரசு நீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சீரழித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆனந்த முனியராஜ் தலைமை வகித்தார்.திண்டுக்கல் எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்று பேசியதாவது:
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நோக்கத்தில் நீட் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
மத்திய அரசு நீட் தேர்வால் பல ஊழலுக்கு வழிவகிக்கிறது. பல லட்சம் கோடி பேரம் நடத்தப்பட்டு வினாத்தாள் ஏலம் விடப்பட்டு மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்து கொண்டனர். மருத்துவக் கனவு ஏழைகளுக்கு எட்டாமல் போனதற்கு காரணம் நீட் தேர்வு தான். பிளஸ் டூ தேர்வு மார்க் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை ஒதுக்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்புகளை படிக்க முடியும். திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து போராடும். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், தமிழ்நாடு முன்னாள் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் மைதீன் பாவா,மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் அரபு முகமது, தந்தை பெரியார் பிரச்சார குழு செயலாளர் துறை சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.



