மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கண் மருத்துவர்கள், கண்ணில் சொருகிய கம்பிகளை அகற்றி இரண்டு கண் காயம் தொடர்பான பாதிப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டு, நோயாளிகளைக் கடுமையான மற்றும் நிரந்தரப் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மட்டுமன்றி தென் மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாக திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு, கண்ணில் காயமடைந்த இரண்டு நோயாளிகளுக்கு மிக அரிய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ் குமார் செய்தியாளரிடம் கூறுகையில், முதல் நிகழ்வில், 10 வயது சிறுவன் ஒருவன் பிளேஸ்டேஷன் ரிமோட்டின் ஆண்டெனா வயர் தவறுதலாக அவனது வலது கீழ் இமையில் குத்திய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான். ஆரம்பத்தில் இந்தக் காயம் மேலோட்டமானதாகத் தெரிந்தாலும், ஸ்பிரிங் போன்ற அந்த வயர் உள்நோக்கி வளைந்து, கண்ணில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருந்தது. சூழ்நிலையின் சிக்கலைப் புரிந்துகொண்ட சிறப்பு கண் மருத்துவக் குழு. உடனடியாக பொது மயக்க மருந்து (General Anaesthesia) அளித்து குழந்தையை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியது. ஒரு நுணுக்கமான நடைமுறைக்குப் பிறகு, மருத்துவர்கள் கண்ணுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அந்த வயரை வெற்றிகரமாக அகற்றினர்; இதனால் நிரந்தர பாதிப்பு ஏதுமின்றி குழந்தையின் பார்வை பாதுகாக்கப்பட்டது.

இரண்டாவது குறிப்பிடத்தக்க நிகழ்வானது, சாலை விபத்துக்குப் பிறகு தேனியில் இருந்து கண் காயத்துடன் பரிந்துரைக்கப்பட்ட 50 வயதுடைய ஒருவருக்கு, சிடி (CT) ஸ்கேன் பரிசோதனையில், 6.7 செ.மீ நீளமுள்ள ஒரு குழாய் போன்ற அந்நியப் பொருள் அவரது இடது கண்ணைக் கடந்து, நடு மண்டையோட்டுப் பகுதிக்குள் (middle cranial cavity) நுழைந்து, அதன் முனைப்பகுதி அவரது மூளையின் டெம்போரல் மடல் என்னும் பகுதியில் ( temporal lobe) தங்கியிருந்தது தெரிய வந்தது. தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு. கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஆர்பிட்டல் தளம் (orbital floor) மற்றும் சைனஸ் பாதையை ஆராய்ந்து, அந்தப் பொருள் முழுவதையும் மெதுவாகவும் வெற்றிகரமாகவும் வெளியே எடுத்தனர் என்றார்
ஆர்பிட் (Orbit) பிரிவுத் தலைவர் டாக்டர் பர்வத சுந்தரி கூறுகையில், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அந்நியப் பொருளை (Foreign body) உறவினர்கள் தாங்களாகவே அகற்ற முயற்சிப்பது சில சமயங்களில் அதை மேலும் உள்ளே தள்ளி, சிறுவனின் வழக்கில் நடந்தது போல் அகற்றும் பணியைச் சிக்கலாக்கிவிடும். அது போன்ற நேரத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டுமே தவிர தாங்களாக முயற்சி செய்வது மிக மிக தவறு. இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவில் தேவையான அனைத்து வசதிகளும் நவீன மருத்துவ சாதனங்களும் உள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்’ என்றார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் சுகன்யா கூறுகையில், நிலக்கோட்டை அருகே கோவில்பட்டி தான் எங்களது கிராமம். எனது பையன் பாதிக்கப்பட்டவுடன் இரண்டு மூன்று மருத்துவமனைகளை அணுகினோம் அவர்கள் மிகவும் தயங்கியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக வந்து சேர்ந்தோம். இங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மிக அன்பாக கவனித்துக் கொண்டனர். ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து என் குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
இந்த பேட்டியின் போது, மயக்கவியல் துறை மற்றும் அதன் துறைத் தலைவர் (HOD) பேராசிரியர் டாக்டர் கவிதா உட்பட மருத்துவ பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.



