திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் உலகப் புத்தகத் திருநாள் விழா மற்றும் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம் புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்து தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் பா.ஆனந்தகுமார் வரவேற்று பேசும்போது “யுனெஸ்கோ அமைப்பால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படும் நாட்களில் உலகப் புத்தகத் தினமும் ஒன்று. இன்றைய இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
அதனை மேம்படுத்தும் பொருட்டே ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று உலகப் புத்தகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் நாள்தோறும் ஒரு புத்தகம் வாசிப்பது என இலக்கு வைத்து வாசிப்பில் ஈடுபடும்போதுதான் வெற்றியடைய முடியும்” என்றார். பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தனது தலைமையுரையில் “நம் நாட்டில் வாசிப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இன்று குறைந்து வருகிறது. ஆனால், லித்வேனியா நகரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நூலகத்தைக் காண முடியும். வாசிப்புப் பழக்கத்தை முதன்மையானதாகக் கருதி தவறாது அதனை மேற்கொண்டவர்களே வாழ்வில் வெற்றியடைந்துள்ளனர்.
நம் நாட்டின் முன்னாள் பிரதமர் நேரு பயணத்தின்போதுகூட வாசிக்கும் வழக்கத்தை உடையவர். சாக்ரடீஸ், பகத்சிங், அண்ணாதுரை ஆகியோர் மரணத்தைப் பொருட்படுத்தாமல் சாகும் நொடிவைரை வாசித்துக்கொண்டிருந்தனர். வாசிப்பின் மீதிருந்த பற்றே அவர்களை உயர்த்தியது. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு இளைஞர்கள் தினமும் வாசிப்பில் ஈடுபட வேண்டும்” என்றார். அதனைத் தொடர்ந்து என்னைக் கவர்ந்த புத்தகம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர் ம.தாட்சாயனி, முதுகலைத் தமிழ் மாணவர்கள் அ.சுபாஷினி, தி.விக்னேஷ்குமார் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
விழாவில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சி.சிதம்பரம், இந்தித்துறை மூத்த பேராசிரியர் மொகல் சலீம் பெய்க் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் இந்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.




