• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,

ByS.Ariyanayagam

Apr 8, 2026

திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறமன விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
எனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் நேற்று கடலூரில் முதலமைச்சரோடுகடலூர் மாவட்ட வேட்பாளர்களுக்குமான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரித்தேன்.

இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியகுளத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசுக்கு பிரச்சாரம் செய்வதற்காக வருகை தந்துள்ள சூழலில், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரிக்க உள்ளேன்.
தொடர்ந்து 21-ஆம் தேதி வரையில் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர்களுக்கும் ஆங்காங்கே கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களுக்கும் தீவிரமாக வாக்குச் சேகரிக்க உள்ளேன்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகோபித்த பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெறும். 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைமையிலான இந்த மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு முதன்மை பலமாக இருப்பது கூட்டணி பலம். திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற கட்சிகள் கூட்டணி பலமில்லாமல் களத்தில் உள்ளன.
23 கட்சிகளைக் கொண்ட ஒரு பெரிய, கொள்கை பிடிப்புள்ள கூட்டணி, தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற கூட்டணி, எனவே கூட்டணி பலம் எமது வெற்றிக்கு முதன்மையான காரணம்.

இரண்டாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செய்திருக்கிற பல்வேறு சாதனைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்திருக்கிறது. அவர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தக் கூட்டணிக்கு உண்டு. மூன்றாவது, ₹8000 கூப்பன் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என்கிற வாக்குறுதி உட்பட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தேர்தல் அறிக்கை அளித்துள்ளது. அது எங்கள் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கிறது.

எனவே திமுக கூட்டணி கட்சிகளை எதிர்த்து நிற்பவர்களுக்கு எதிரான அவதூறுகளை மட்டுமே பரப்ப முடிகிறது. அந்த அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.
தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல் அல்லது ஒரு பிளாக்மெயில் என்கிற அணுகுமுறையை பாஜகவினர் கையாண்டு வருகிறார்கள்.
அவர்கள் வட இந்திய மாநிலங்களில் எப்படி சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்களோ, அதைப்போல இங்கேயும் கைவரிசை காட்டப் பார்க்கிறார்கள். அவர்களின் எந்த சதி முயற்சியும் இங்கே வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும்.
அதிமுகவிற்கு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. முதலில் அவர்களுக்குக் கூட்டணி பலம் இல்லை. அவர்கள் கூட்டணியை நியாயப்படுத்தவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

பாஜகவோடு ஏன் கூட்டணி சேர்ந்தோம் என்று அதிமுகவினரால் நியாயப்படுத்த முடியாது. பாஜகவினராலும் அதிமுகவோடு ஏன் கூட்டணி சேர்ந்தோம் என்பதை நியாயப்படுத்த மடியாது. ஒரு பொருந்தாக் கூட்டணி. அதேபோல அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக முரண்பட்டு கடந்த காலங்களில் விமர்சனம் செய்து கொண்டவர்கள்.
எனவே, அதிமுக கூட்டணியைக் நியாயப்படுத்த முடியாது. அந்த விரக்தியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத் தனிநபர் விமர்சனங்களாக மாற்றி இருக்கிறார்கள். நாகரிக வரம்புகளை மீறிய அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

தேமுதிக-வை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்குப் பெரும் முயற்சியை மேற்கொண்டார்கள். அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார்கள் என்கிற ஏமாற்றம், விரக்தி, அதனால் எழுந்துள்ள ஆத்திரம் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது.

இவற்றைத் தமிழ்நாட்டு மக்கள் அமைதியாகக் கவனித்து வருகிறார்கள். திமுக கூட்டணிக் தலைவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள், திமுக கூட்டணியை எதிர்க்கிற மற்ற கட்சியைச் சார்ந்தவர்கள் எவ்வாறு தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்கள் என்பதை யெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 23-ஆம் தேதி அதற்கான தீர்ப்பை எழுதுவார்கள்.

தற்போது பரப்புரைகளுக்கு அனுமதி வழங்குகிற அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருக்கலாம் அந்த இடங்களில், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களை வழிநடத்துகிறது. எனவே விஜய் அவர்களுக்குப் பரப்புரை செய்வதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்றால் அதற்கு திமுக அரசு அல்லது திமுக தலைமையில் உள்ள அந்த அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அல்லது திமுக பொறுப்பாளர்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது. வேண்டுமென்றே திமுக-வுக்கு எதிராக அதைத் திருப்பப் பார்க்கிறார்கள்.

மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை, மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்.