புதுக்கோட்டையில் அண்மையில் அரசியல் கட்சிகளில் நடைபெற்ற உள்ளே புகுந்தும் வெளியேறியும் சென்ற காட்சிகள் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட பெருந்தொழிலதிபர் நல்லூர் பன்னீர். இவர் கடந்த காலங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டதில் ஒரு முறை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் இன்னொரு முறை போட்டியிட்டதில் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட செல்வாக்கு மிக்கவர்.

அதிமுக அண்மைக் காலத்தில் மக்களிடத்தில் செல்வாக்கு மிகவும் குறைந்து வருவதாக நினைத்த இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தை மிகப் பெரிய அளவுக்கு அரசியலில் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில் அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னைக்குச் சென்று அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து விட்டு வந்தார்.

இப்போது நடைபெற இருக்கும் 2026 சட்ட மன்றப் பொதுத் தேர்தலுக்காக புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சியின் வண்ணத்தில் வாக்குகள் சேகரித்து சுவரெழுத்துகள் பல இடங்களில் வரைந்து வைத்து லட்சக் கணக்கான மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர். முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தவெகவிற்குச் சென்றபோது அவருக்கான தலைமைத்துவமும் தனித்துவமும் கிடைக்கும் என்பதைவிடவும் இனி அவர்தான், அவரது ஆலோசனைகள்தான் தவெகவில் நடைமுறைப்படுத்தப் படும் என்ற எதிர் பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்தது. அதே நிலை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் கிடைக்கும் என்று நல்லூர் பன்னீரும் எதிர்பார்த்துதான் அக்கட்சியில் இருக்கும் என்று எதிர் பார்த்திருக்கிறார்.

இது அவருக்கு மட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்களுக்கும் பொருந்தும். முன்னாள் அதிமுக அமைச்சர்களான செங்கோட்டையனுக்கும் கு.ப.கிருஷ்ணனுக்கும் உரிய இடம் அங்கு கிடைத்திருக்கிறதா என்பதை அவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலையில் அவர்களுக்கே அந்த தன்மானம் கிடைக்கவில்லை, தன்மானத்திற்கு ஓர் இழுக்கு என்றால் நாம் ஏன் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஓர் முடிவெடுத்தார். அதனால் அவர் எழுதிய சுவரெழுத்து விளம்பரங்களை இன்றுவரை அழிக்கவில்லை என்ற போதிலும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார்.
இது குறித்து பன்னீர் கூறுகையில் நான் சுயமரியாதைக்காரன் என்பது அனைவருக்கும் தெரியும். அது தவெகவில் கிடைக்கும் என்று கருதித்தான் அதில் சேர்ந்தேன்;. அது தவறான முடிவு என்பதை உடனே அறிந்து கொண்டதால் திமுகவில் சேர்ந்தேன். அங்கு அக்கட்சியின் தலைவர் முதல் உள்ளு}ர் மாவட்டப் பொறுப்பாளர்களும் அமைச்சர் உள்ளிட்டவர்களும் எனக்கான மரியாதையைத் தந்திருக்கிறார்கள். அன்போடு பேசுகிறார்கள். சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்திருக்கிறேன் என்றார்.
வெளியே என்கிற வகையில் அதிமுகவிலிருந்து வெளியேயும் தவெகவிலிருந்து உள்ளேயும் பின்னர் அங்கிருந்து வெளியேயும் இப்போது திமுகவின் உள்ளேயும் ஐக்கியமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
அடுத்ததாக காடுவெட்டி குமார். அதற்கு முன்னதாக ஒரு சிறிய விளக்கம். குமார் என்றாலோ சுப்பிரமணிய ராஜாளியார் என்றாலோ யாருக்கும் தெரியாது. ஆனால் காடுவெட்டி குமார் என்றால் புதுக்கோட்டைக்குள் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆன்மீகப் பணிகளின் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் ஆன்மீகவாதிகளும் நிறையப் பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கும் உள்ளே வெளியே என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.
புதுக்கோட்டைக்குள் தியாகராஜன் என்றால் நூறு தியாகராஜன்கள் வந்து நிற்பார்கள். ஆனால் காடுவெட்டியார் என்றால் அத்தனை பேரும் அடங்கிப் போய் விடுவார்கள். அந்தளவுக்குப் பெயர் பெற்றவர் தியாகராஜ காடுவெட்டியார். 1962, மற்றும் 1967ஆகிய காலக் கட்டங்களில் புதுக்கோட்டையின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1986ல் புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவராக இருந்து மக்களுக்குச் சேவை செய்து வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவரைப் பற்றிய வரலாறுகள் நிறைய உண்டு.

இன்றைக்கும் காடுவெட்டியார் என்றாலே அவரை நினைவு படுத்தும் வரலாறுகள்தான் நம் முன்னே வந்து நிற்கும். தமிழ்நாட்டில் முக்குலத்தோர் சங்கம் தொடங்கியவர் புதுக்கோட்டை காடுவெட்டியார்தான். அவரது அக்கா பேரன்தான் காடுவெட்டி குமார். இயற்பெயர் சுப்பிரமணிய ராஜாளியார். அவர் தனது அரசியல் பயணத்தை பாஜகவில் தொடங்கியபோது அவரை சரியாகப் பயன் படுத்தி விளம்பரங்கள் தேடிக் கொண்ட பாஜகவினர் கருவேப்பிலையாக மட்டுமே பயன் படுத்தியிருக்கிறார்கள். அதனை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்ட காடுவெட்டி குமார் அதிலிருந்து வெளியே வந்து இப்போது தவெகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது வருகையை தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணமே அவரது தாத்தா காடுவெட்டியாரின் பெருமைகள்தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
மாவட்டத் தலைமையும் எங்கு சென்றாலும் குமாருக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதே நேரத்தில் நல்லூர் பன்னீர் போன்றவர்கள் வெளியேறி இருப்பது மாபெரும் இழப்பு என்பதையும் மறுப்பதற்கில்லை.




