• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகர காவல் ஆணையர் IPS கண்ணன் பேட்டி..,

BySeenu

Mar 8, 2026

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் IPS இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் DNA மாதிரி முடிவுகள் மிகத் துல்லியமாகத் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை குறித்து சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஆணையர், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும், NCRB தரவுகளின்படி கோவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், குற்றச் செயல்கள் என்பது ஒரு அசாதாரண மனநிலை (Abnormal Behaviour) என்றும், பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் அளித்தார்.

இதேபோல், ராமநாதபுரம் பகுதியில் 82 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு முக்கியக் குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார். திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காகத் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை பெங்களூருவில் முகாமிட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று அவர் கூறினார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காயங்கள் ஏதும் இல்லை என்பதும், பெரிய அளவில் நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாடு குறித்துப் பேசிய அவர், கோவையில் ஏழு ‘பிங்க் ரோந்து’ (Pink Patrol) வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவிநாசி மேம்பாலத்தில் அதிவேகத்தைக் கட்டுப்படுத்த ‘ஸ்பீடு ரேடார்’ (Speed Radar) கருவிகள் அமைக்கப்பட உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு காவல் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ‘U-Turn’ அமைப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.