• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா!

BySeenu

Mar 5, 2026

​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில் கலைஞர் UMT ராஜா, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் நூதன தேர்தல் விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

​தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த UMT ராஜா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அரிதாகக் காணப்படும் இருவாச்சிப் பறவையை (Hornbill) ‘வாக்கு வீரன்’ என்ற கதாபாத்திரமாக உருவகப்படுத்தி ஒரு பெரிய காத்தாடியை வடிவமைத்துள்ளார்.

​தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பட்டு வேட்டி மற்றும் வெள்ளை பனியன் அணிந்திருப்பது போலவும், கையில் வாக்கு செலுத்தியதற்கான அடையாளத்தைக் காட்டுவது போலவும் இந்த உருவம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘எனது வாக்கு எனது உரிமை’ மற்றும் ‘100% வாக்குப்பதிவு’ ஆகிய வாசகங்களை ஏந்தியபடி இந்த ‘வாக்கு வீரன்’ காத்தாடியை வானில் பறக்கவிட்டு, மக்கள் மத்தியில் ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை அவர் கொண்டு சேர்க்கிறார்.

​தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பணிகளுக்குத் துணையாக, ஒரு தனி மனிதராக UMT ராஜா மேற்கொண்டுள்ள இந்த கலைநயம் மிக்க முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.