காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் கார்த்தி, தமிழ்ச்செல்வன், தயாளன், இளங்கோவன் உள்ளிட்ட 14 மீனவர்கள் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

இதேபோல் காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மோகன், சின்னையன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த இரண்டு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி காரை நகர் கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 25 மீனவர்களையும், இரண்டு விசைப்படகையும் விடுவிக்க மத்திய அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






