• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை!!

BySeenu

Feb 5, 2026

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயராஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 13 மாதங்களே ஆன பெண் யானை கரு இருந்ததும் கண்டறியப்பட்டது.

யானையின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து வனத்துறை தரப்பில் கூறும்போது:

உயிரிழந்த யானையின் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாகச் சேதம் அடைந்து உள்ளன.
கடந்த சில வாரங்களாக அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்து உள்ளது.

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

இந்த யானை தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி தவித்த போது வனத்துறையினரால் மீட்கப்பட்டது.

“ஒரு கர்ப்பிணி யானை சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பிறகும், அதன் உடல்நிலையை வனத்துறையினர் ஏன் முறையாகக் கண்காணிக்கவில்லை ? அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்ததை ஏன் கண்டறியவில்லை ?”
என வன ஆர்வலர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மீட்கப்பட்ட ஒரு வாரத்திலேயே, வயிற்றில் குட்டியுடன் யானை உயிரிழந்து இருப்பது வனத்துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் உள்ள தொய்வையே காட்டுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

யானைகள் வழக்கமாக 21 மாதங்கள் கருவுற்று இருக்கும். ஆனால், இந்த யானை 13 மாதங்களிலேயே கருவுடன் உயிரிழந்தது, வனவிலங்கு பாதுகாப்பில் ஏற்பட்டு உள்ள பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் யானையின் உடல் அதே வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.