• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகளே- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..,

ByPrabhu Sekar

Feb 3, 2026

தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு இன்னும் அதிகப்படியான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும் என தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிநீர் இணைப்பு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எங்கள் கட்சியின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியே என அவர் கூறினார். இந்த திட்டம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முழுமையான தீர்வாக அமையும் என்றும், இதை கட்சி சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய திராவிட முற்போக்கு கழகத்தை குறித்து சில தனியார் தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர், கூட்டணி தொடர்பான முடிவுகள் மூன்றாம் தேதிக்குப் பிறகே அறிவிக்கப்படும் என்றும், தலைமை அலுவலகத்தின் அறிவிப்பே இறுதியானது என்றும் தெளிவுபடுத்தினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறாத நிலையில், நடைபெற்றதாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாகவும் கூறினார்.

மற்ற கட்சிகள் குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், எங்கள் கட்சி குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளேன் என்றார். அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகளே என்றும், பூத் கமிட்டிகள் அமைத்து தமிழகம் முழுவதும் கட்சி வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரூரில் நடந்த சம்பவம் வருத்தத்துக்குரியது என குறிப்பிட்ட அவர், சட்டம் தனது கடமையை செய்யும் என்றும், செய்தியாளர்களை மிரட்டுவது அல்லது தாக்குவது முற்றிலும் தவறானது என்றும் கூறினார்.

பட்ஜெட்டை விமர்சித்த அவர், யானை பசிக்கு சோழப்பொரி போன்ற அறிவிப்புகளே அதிகம் உள்ளதாக கூறினார். விவசாயிகள், நடுத்தர மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போதிய அறிவிப்புகள் இல்லை என்றும், 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள வரி குறைப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும், இதனால் ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.