புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான் கொல்லை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு செல்வதற்கு ஒரு பொதுப் பாதை இருக்கிறது.

அந்தப் பாதையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் சாலையை மறித்து கழிவறை ஒன்றை கட்டி வைத்திருக்கிறார். நான்காண்டுகளாக இது குறித்து அந்தப் பகுதி மக்கள் அவரிடம் முறையிட்டதோடு மட்டுமல்லாது வட்டாட்சியர் கோட்டாட்சியர் என அதிகாரிகள் பலரிடமும் மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த கழிவறையை அகற்ற முன்வரவில்லை.
இது குறித்து இன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆன சங்கரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். மனு கொடுத்த பிறகு மாவட்டச் செயலாளர் சங்கர் கூறுகையில் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புகார் செய்யப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் பார்வையிட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உடனடியாக இந்த கழிவறையை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற வேண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
அந்த உத்தரவை வாங்கி பார்த்த பிறகும் எந்த அதிகாரியும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே வருவாய்த்துறையினர் பல ஆக்கிரமிப்புகளை எடுத்திருக்கிறார்கள். அவை அனைத்துமே ஏழை மக்கள் குடியிருந்து வசித்து வந்த பகுதிகளாகும். ஏழை மக்களை உடனடியாக ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும் வருவாய் துறையினரும் காவல்துறையினரும் இது போன்ற பணக்காரர்கள் செய்யும் ஆக்கிரமிப்புகளை எடுக்க முன் வருவதில்லை.
ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலங்களை எல்லாம் எளிதாக அகற்றி விடும் அதிகாரிகள் இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் பொது பாதையில் கட்டி இருக்கும் கழிவறையே அகற்றுவதற்கு உயர்நீதிமன்றம் வரை செல்லும் அவலம் இங்கு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலரும் உறுதி தெரிவித்திருக்கிறார். எப்போது எடுக்கிறார்கள் என்பது எடுத்த பிறகு தான் தெரியும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.








