தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பேச்சி ராஜா மற்றும் காபிரியேல் ஆகியோர் இன்று அதிகாலை வீரபாண்டிய பட்டனம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் 15 மூட்டைகளில் மருந்து மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர். கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் பூமியாக மாறிவிட்டது தூத்துக்குடி மாவட்டம் எனவும் பல்வேறு அரசியல் வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








