தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வ.உ.சி.நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி செல்வி (வயது35), இவர் ஒரத்தநாடு அருகில் உள்ள பின்னையூரில் இருக்கும் தனது தாயார் வீட்டில் இருந்தவாறு ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆஸ்பத்திரியில் வேலை முடிந்ததும், அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு பின்னையூருக்கு சென்றுக் கொண்டிருந்தார். இவர் நெடுவாக்கோட்டை கேணி பாலம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிள் சென்ற ஒரு வாலிபர் தனது காலால், செல்வி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரை எட்டி உதைத்துள்ளார். அப்போது கீழே விழுந்த செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை அந்த வாலிபர் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவருடன் செல்வி போராடிக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் -பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததை பார்த்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் வேகமாக தப்பிச் சென்றார்.
ஆனாலும் அந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இதனால் தப்பிச் செல்ல முடியாமல் அந்த வாலிபர் அதே சாலையில் அங்கும் – இங்குமாக சுற்றிவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். மறுமுனையில் இது பற்றிய தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பிடிபட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஒரத்தநாடு திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட் மைதீன் மகன் அப்துல்கனி (வயது31) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறிக்க முயன்ற அப்துல்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்த செல்வி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)