பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட இருப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதால் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பரபரப்பு தொற்றி உள்ளது.
திண்டுக்கல்லுக்கும் அதிமுகவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. கட்சி துவங்கியவுடன், 1972ம் ஆண்டு அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதி திண்டுக்கல் ஆகும். இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதால் அரை நூற்றாண்டு காலம் அரசியல் உலகில் பேச வைத்த ஊர்.
இதனால் எம்ஜிஆர் திண்டுக்கல்லை தனது செல்லப் பிள்ளையாக கருதினார். திண்டுக்கல்லுக்கு பேரணை திட்டம், ரயிலில் குடிநீர் கொண்டு வந்து திண்டுக்கல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரும்பாடுபட்டார். திண்டுக்கல் என்று பேரை சொல்லி என்ன கோரிக்கை வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றினார்.
எம்ஜிஆர் இருந்தபோது திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற முடியாமல் திமுக திணறியது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் 1996ம் ஆண்டு அதிமுகவுக்கு எதிராக ஏற்பட்ட அலையில் திமுக திண்டுக்கல்லில் வெற்றி பெற்றது. அதற்குப் பின்பு இந்த தொகுதி அதிமுக கூட்டணியில இருந்தாலும், திமுக கூட்டணியில் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
ஆனால் கடந்த இரண்டு முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி வாகை சூடி வருகிறார். இந்த முறை திண்டுக்கல்லில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாகும்.

திண்டுக்கல் கைப்பற்ற திமுக கடும் முயற்சி எடுத்துள்ளது. இதற்காக தொகுதி பார்வையாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பழனி எம்எல்ஏவும் ,அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனுமான ஐ.பி செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட போவதாக கட்சியினர் வரிந்து கட்டி பணியை துவக்கி உள்ளனர்.
இது குறித்து திமுகவினர் நம்மிடம் கூறியதாவது:
”பழனி தொகுதியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி கட்டிடங்களை கட்டி புதிய வடிவம் கொடுத்திருப்பவர் எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார். அதே நேரத்தில் கொடைக்கானலுக்கு புதிய ரோப் கார் திட்டம், புதிய பாதை திட்டம் என பல திட்டங்களை தீட்டி உள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அப்படி வெற்றி பெறும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல்லை தருவது தலைமைக்கு பிடிக்கவில்லை.
திண்டுக்கல் தொகுதியை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தலைமை குறியாக உள்ளது. இதற்காக தேர்தல் பொறுப்பாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சிவா அமைச்சர் ஐபிக்கு நெருங்கிய உறவினர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் ஐ .பி.செந்தில்குமாரை திண்டுக்கல்லில் நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பழனியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்து முறை எம்.பி. இரண்டு முறை எம் எல் ஏ, ஒருமுறை அமைச்சர் என சாதனை படைத்த திண்டுக்கல் சீனிவாசனை எதிர்கொள்வது சுலபமான காரியம் அல்ல. அதனால் திண்டுக்கல் பணியை திமுக சுறுசுறுப்பாக துவக்கி உள்ளது.

சீனிவாசனை வீழ்த்த அனைத்து சக்திகளும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறை திண்டுக்கல் திமுகவுக்கு தான் என்பதை உறுதி செய்யும் வகையில் காய்கள் நகர்த்தப்படுகிறது. அர்ஜுனனுக்கு மரத்தில் இருக்கும் கனி தெரிந்தது போல ஐ.பி. செந்தில்குமாருக்கு திண்டுக்கல் மட்டுமே தெரியும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றனர்.
இதுகுறித்து ஐ பி செந்தில்குமாரிடமே அரசியல் டுடே சார்பாக பேசினோம்.
“தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்கள் தலைவர் கோடு போடச் சொன்னால், நாங்கள் ரோடு போடுவோம்” என்றார்.
இது குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் அரசியல் டுடே சார்பாக பேசியபோதும், “போர்க்களத்துக்கு சென்று ஒப்பாரி வைப்பவன் நான் அல்ல. பல தேர்தலை சந்தித்து விட்டேன். யார் எதிர்த்து நின்றாலும் மக்கள் செல்வாக்கு எனக்கு உள்ளது. சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த முறையும் நிச்சயம் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.
திண்டுக்கல்லுக்கு செந்தில்குமாரரை தொகுதி மாற்றினால்,பழனி தொகுதியை மார்க்சிஸ்ட் ஒப்புக்கொள்ளுமா என்பது திமுக கூட்டணிக்குள் அடுத்த பிரச்சினை!













; ?>)
; ?>)
; ?>)